Tuesday, February 25, 2014

சரணம் சரணமஹம் ப்ரபத்யே

சரணாகதி, பரந்யாஸம், பரஸமர்ப்பணம், ப்ரபத்தி,சரணம் சரணமஹம் ப்ரபத்யே

பகவானுடைய திருவடிகளை அடைக்கலம் அடைவதே சரணாகதி (பிரபத்தி).

ஜனனம், ஸம்சாரம், மரணம் என்ற சுழல்களில் உழல்கின்ற ஒவ்வொரு ஜீவனும், அச்சுழலில் இருந்து வெளியேற வேண்டுமானால் பகவானையே சரணமாகக் கொள்ள வேண்டும். பகவான் ஒருவரே அந்தக் கொடிய சுழலில் இருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவாமை என்னும் ஸாஸ்வத சுகத்தை நமக்கு அளிக்க வல்லவர்.

எனவே, ஒவ்வொருவரும் தக்க ஆசார்யரை அடைந்து அவரிடம் உபதேசம் பெற்று பகவானைச் சரணடைய வேண்டும். இவ்வாறு சரணடைந்து விட்ட ஜீவனை ரக்ஷிக்கும் பாரத்தை பகவான் தானே ஏற்றுக் கொள்கிறார்.

தன்னைத் தானே  காத்துக் கொள்வது முதலில் தலை தூக்கி நிற்கும். ஆனால் அந்த முறையால், நம்மை  பாதுகாத்துக்கொள்ள முடியாது. தன் உடம்பில் கடைசி சுற்றுப்புடவை இருக்கும்வரை, த்ரௌபதி தன்னைத்தானே காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாள். அது பலனளிக்கவில்லை எனத்தெரிந்ததும் தன் இரு  கைகளையும் தலை மேல் கூப்பி "ஆபத்பாந்தவா, சரணாகத ரக்ஷகா என்னைக் காப்பது உன் பொறுப்பு" என்று  ஓலமிட்டாள். உதவுவதற்காகவே காத்திருக்கும் பகவான் அவளைக் கைவிடவில்லை. 

என் பாட்டி இந்தக் கதையை எனக்குச் சொல்லும்போது சொல்வார் : 
"ஆபத்பாந்தவா, சரணாகத ரக்ஷகா, அநாத ரக்ஷகா, என்று த்ரௌபதி கூப்பிட்டாள். பெருமாள் வரவில்லை. கடைசியாக, இரு கைகளையும்  மேலே தூக்கி "ஹ்ருதயகமலவாஸா" என்று கூப்பிட்டாள், உடனேயே வந்துவிட்டார் பெருமாள். ஏனெனில் இதயம் பக்கத்திலேயே இருக்கிறது, உடனே வந்துவிட்டார்" என்று சொல்வார்.  பெருமாள்  நமக்கு அவ்வளவு அருகாமையில் இருக்கிறார். நாம்தான் அவரை மறந்து விடுகிறோம் என்பார்.

ஆகவே, தன்னைக் காத்துக்கொள்ளும் எண்ணத்தை விட்டு ஸகல பாரத்தையும் பகவானிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

இந்த சரணாகதிக்கு பரந்யாஸம், பரஸமர்ப்பணம், ப்ரபத்தி, அத்ருஷ்டார்த்தம் என்ற பெயர்களுமுண்டு.

இதை அனுஷ்டிக்கும் ஒவ்வொருவரும், பின்கண்ட வகையில் மனதில் உறுதி பூண்டவராக இருக்கவேண்டும்.

1.  இதுவரை ஸாஸ்த்ரங்களாகிய பகவானுடைய ஆணையை மீறி, பல பாவங்களையே செய்து வந்தேன். இனி, பகவானுக்கு அனுகூலமான காரியங்களையே செய்வேன்.

2. அவனுக்கு பிரதிகூலமான(இஷ்டமில்லாத) காரியங்களைச் செய்யமாட்டேன்.

3. என் இடர்களைக் களைந்து என்னைக் காக்க வல்லவன் பகவானைத்தவிர வேறு எவருமே இல்லை.

4. நான் பகவானைப் பிரார்த்தித்தால் அவர் என்னைத் தனக்கே உரியதான கருணையால் நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

5. ஸ்ரீய:பதியான பகவான் என்னைக்காத்து ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இந்த ஐந்து வி உறுதியுடன், தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் பகவானுக்கே உரியவர்கள் என்று சரணாகதியடைகிறேன்.

விரும்பிய பலனைக் கொடுக்கும் பொறுப்பும் (பரமும்) உன்னுடயதே என்றும், அதன் பலனும் உன்னுடையதே என்றும் அவனிடம் சமர்ப்பிப்பது பரந்யாசமாகும்.

சரணாகதி செய்வதால் மோக்ஷம் என்கிற பரலோக சுகம் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. இகத்திலும், ஐஸ்வர்யம், புத்திரப்பேறு, உத்யோக உயர்வு, வ்யாபாரவ்ருத்தி முதலிய ஸகலமான பலன்களும் சரணாகதியால் கிடைக்கும். அவனிடம் சரணடைவதால் ஸகலவிதமான பாபங்களும் பஸ்பமாகிவிடுகின்றன. இதை," ஸர்வ பாபேப்யோ  மோக்ஷயிஷ்யாமி" என்ற அவர் வாக்கே உறுதி செய்கிறது.

இதற்காகவே, ஸ்ரீ தேசிகன் "நியாஸ தசகம்"  என்ற ஸ்தோத்ரத்தை இயற்றியிருக்கிறார்.

2 comments:

  1. சரணாகதி என்று வரும்போது லவேசம் கூட நம்முடைய மனுஷ்ய பிரயத்தினத்தில் நம்பிக்கை வைக்காமல் துளியும் சந்தேகமில்லாமல் பெருமாளின் பொறுப்பில் விட்டுவிட்டால் நிச்சயமாக அவர் நம்மை கை விடமாட்டார் என்பது திண்ணம்
    அடுத்து வரும் உங்களின் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete