Saturday, February 7, 2015

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம்

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.

மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.

உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.

பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

1 comment:

  1. கிருஷ்ணா பகவான் ருக்மணியை அவளுடைய வேண்டுதல் படியே கடத்தி சென்று மணம் புரிந்தார்.இந்த ருக்மணி கல்யாணாத்தை அருமையாகவும் சுருக்கமாகவும் எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete